Wednesday, 1 May 2013

பவர்ஸ்டார் மீது மேலும் 3 வழக்கு


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் 3 மோசடி புகார்கள் அளிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தேவதாசன் என்பவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விபரம் வருமாறு, நான் கண்ணூரில் உள்ள நகை கடையில் பங்குதாரராக உள்ளேன். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டேன்.
2010ல் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான பாபா டிரேடிங் கம்பெனியின் ஏஜெண்ட் என்று சொல்லிக் கொண்டு சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் எனக்கு அறிமுகமானார். கடன் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
பின்னர் சென்னை அண்ணா நகரில் உள்ள பாபா டிரேடிங் கம்பெனியில் பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க வைத்தார். ரூ.6 கோடி கடன் வேண்டும் என்றேன்.
இதையடுத்து என் சொத்து விவரங்கள் பற்றி சீனிவாசன் கேட்டு அறிந்தார். ரூ.5.35 கோடி கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.21.50 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினார்.
நான் ரூ.21 லட்சத்துக்கு செக்கும், ரூ.50 ஆயிரம் ரொக்கமாகவும் கொடுத்தேன். ஆனால் அவர் கடன் பெற்று தரவில்லை. பலமுறை அலைந்த பின்பு நுங்கம்பாக்கம் யெஸ் பேங்க்கில் மாற்றத்தக்க வகையில் ரூ.2 கோடிக்கு காசோலை கொடுத்தார்.
அதை வங்கியில் கொடுத்தபோது கையெழுத்து மாறி உள்ளது என்று திருப்பி கொடுத்து விட்டனர்.
சீனிவாசன் என்னை ஏமாற்றி விட்டார். மீண்டும் சந்தித்து எனக்கு கடன் வேண்டாம் நான் கொடுத்த ரூ.21 லட்சத்தை திருப்பி கொடுங்கள் என்றேன். ரூ.20 லட்சத்துக்கு செக் கொடுத்தார்.
அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இன்றி திரும்பி வந்து விட்டது என்றும் எனவே மோசடி செய்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீதும், ஏஜெண்ட் கிறிஸ்டோபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சென்ன கிருஷ்ணன் தனக்கு ரூ.1 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி கமிஷனாக ரூ.10 லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்று புகார் செய்துள்ளார்.
அண்ணா நகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் தனக்கு வாடகை பாக்கியாக ரூ.1.80 லட்சம் தரவேண்டும் என்றும் புகார் செய்துள்ளார்.
மோசடி வழக்குகள் குவிவதால் புதுப்படங்களில் பவர் ஸ்டார் சீனிவாசனை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் தவிப்பில் உள்ளனர். அவரை நீக்கி விட்டு வேறு கொமெடி நடிகரை ஒப்பந்தம் செய்ய அவர்கள் யோசிப்பதாக கூறப்படுகிறது.