சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் எந்திரன் பட வினியோகத்தில் ரூ.1.6 கோடி மோசடி செய்ததாக டைரக்டர் ஷக்தி சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல டைரக்டர் ஷக்தி சிதம்பரம் இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா மற்றும் அய்யப்பன் மீது பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சன் பிக்சர்ஸ் 2010-ல் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்தது. செங்கல்பட்டில் 8 தியேட்டர்களில் அப்படத்தை வெளியிடும் உரிமையை கேட்டு சக்சேனாவை அணுகினேன். அவர், தனது பினாமி நிறுவனமான புளூஸ்கை கம்பெனி உரிமையாளர் சுரேசை சந்திக்கும்படி அனுப்பினார். அவரிடம் பேசினேன்.
அதன்பிறகு ரூ.4 கோடிக்கு எந்திரன் பட உரிமையை எனக்கு அளித்தனர். பின்னர் எனக்கு வழங்கப்பட்ட ஒரு தியேட்டர் உரிமையை அவர்களே வைத்து கொண்டனர். அந்த தியேட்டரில்தான் அதிக வசூல் இருந்தது.
இப்படத்தை வெளியிட்ட தன் மூலம் எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அந்த பணத்தை திருப்பி கேட்டபோது, இது கலாநிதிமாறன் கம்பெனி. பணத்தை தர முடியாது என்று சொல்லி மிரட்டினர். என்னை தனி அறையில் அடைத்து வைத்து சக்சேனா, அய்யப்பன், சுரேஷ் ஆகியோர் சித்ரவதை செய்தனர். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பணத்தையும் வாங்கி தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் ஷக்தி சிதம்பரம் கூறி உள்ளார்.
Categories:
சினிமா