சேலம், செப். 7: பிறந்து 40 நாளேயான ஆண் சிசுவை திண்ணையில அடித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் ஓமலூர் அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (25). இவரது மனைவி வனிதா (21). அதே பகுதியில் உள்ள சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு முன்பு வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது குழந்தையுடன் வனிதா பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். திருமணம் ஆனது முதல் வனிதாவை ஜெகதீஸ்வரனின் தாய்க்கு பிடிக்காமல் போனது. அதனால், ஜெகதீஸ்வரனுக்கும் வனிதாவை பிடிக்காமல் போனது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து வனிதா வீட்டுக்கு ஜெகதீஸ்வரன் வந்துள்ளார். வழக்கம் போல் வனிதாவிடம் தகராறு செய்து விட்டு, குழந்தையை அவரது பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் குழந்தையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வனிதாவின் தந்தை முருகேசன் அவரது வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார். மாமனாரைப் பார்த்ததும் குழந்தையை அடித்துள்ளார். ‘பச்சிளம் குழந்தையை ஏன் அடிக்கிறாய்?’ என்று அவர் கேட்க, அதே வினாடி இந்தக் குழந்தையால் தானே இத்தனை பிரச்னை என்று கூறி, அவர் அமர்ந்திருந்த திண்ணையில் குழந்தையின் தலையை ஓங்கி அடித்துள்ளார்.
இதைப்பார்த்த முருகேசன் கூக்குரல் எழுப்ப வனிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தலை பிளந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்தவுடன் ஜெகதீஸ்வரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். படுகாயம் அடைந்த குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஜெகதீஸ்வரனைத் தேடி வருகின்றனர்.
Categories:
தமிழ்நாடு