Tuesday, 4 October 2011

உள்ளாட்சி தேர்தல் – கட்சிகள் தீவிரம் Parties gear up for TN local body polls


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் விருப்பமனு வாங்குதல் உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
அக்டோபர் 21-ம் தேதியுடன் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் முடிவடைகிறது. எனவே, அக்டோபர் 20-க்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் உள்ளன. 152 நகராட்சிகளும், 555 பேரூராட்சிகளும் இருக்கின்றன. 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 618. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகள் உள்ளன. இதற்கான வாக்காளர் பட்டியல்கள் புகைப்படங்களுடன் வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.
வாக்குச் சாவடிகள் எங்கு அமைக்கலாம் என்ற பட்டியலும் தயாரிக்கப்பட்டு விட்டது. தேர்தல் பணியாளர்கள் எவ்வளவு தேவை? பதட்டமான இடங்கள் எவை என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் இந்த முறை நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். வார்டு கவுன்சிலர்களுக்கு தனியாக ஓட்டுப் போட வேண்டும். பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய 4 பேரை தேர்ந்து எடுக்க ஓட்டுப் போட வேண்டும்.
நெல்லை, சேலம், தவிர மற்ற மாநகராட்சிகளில் புதிய வார்டு முறைப்படி தேர்தல் நடக்கிறது. நகர்புற பகுதிகளில் உள்ளவர்கள் 2 ஓட்டுகளும், கிராமபுற பகுதியை சேர்ந்தவர்கள் 4 ஓட்டுகளும் போட வேண்டியது இருக்கும். எனவே நகர்புற பகுதிகளில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து 60 ஆயிரம் மின்னணு ஓட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கிராம பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையில் ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வரலாம் என்பதால் அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமக உள்ளிட்டவை நீடிக்கின்றன. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்ட பா.ம.க., புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ம.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்குமா, இல்லையா என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.
அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச மூவர் குழுவை அதிமுக பொதுச்செயலாளர் நியமித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே உள்ளாட்சி தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன.