Tuesday 4 October 2011

குடிமக்களின் போதையால் தமிழக அரசுக்கு ரூ.14,965 கோடி வருமானம்


சென்னை, செப்.8: தமிழகத்தில் குடிமக்களின் போதை மயக்கத்தால் அரசுக்கு ரூ.14,965 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இத்தகவல் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,562 சில்லறை விற்பனைக் கடைகள் நகரங்களிலும், 3,128 கடைகள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 6,670 மேற்பார்வையாளர்களும், 16, 758 விற்பனையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் (ஆயத்தீர்வை வருவாய், விற்பனை வரி சேர்த்து) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 1995-96-ம் ஆண்டில் வருவாய் ரூ. 1,425 கோடியாக இருந்தது. இந்த வருவாய் சிறிது சிறிதாக அதிகரித்து கடந்த 2009-2010-ம் ஆண்டில் ரூ. 12,498 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் (2010-2011) டாஸ்மாக் வருவாய் ரூ. 14,965 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் கடந்த நிதியாண்டில் 480.46 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 270.88 லட்சம் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் மதுக் கடைகள் அனைத்தையும் அரசே ஏற்று டாஸ்மாக் மூலம் நடத்த ஆரம்பித்தது. அப்போது முதல் மது விற்பனையில் தமிழகம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.