Tuesday 4 October 2011

ஜடா முடியுடன் போராளி படத்தில் சசிகுமார்


சென்னை: போராளி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் சசிகுமார். இதற்காக 2 வருடம் கஷ்டப்பட்டு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார்.
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில். சசிகுமார்தான் தயாரிக்கிறார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில்  நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பிஆர்ஓ நிகில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் சசிகுமார் பேசியதாவது:அது என்ன போராளி என்ற கேள்வியோடு பலர் வந்திருப்பீர்கள். இது தீவிரவாதம் பற்றியதல்ல. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எவ்வளவோ போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
வீட்டை விட்டு வெளியில் வந்து மீண்டும் வீட்டுக்குள் போவதற்குள் ஆயிரம் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி போராடும் 4 பேரின் கதைதான் ‘போராளி.’ நான் (சசிகுமார்), அல்லரி நரேஷ், ஸ்வாதி, நிவேதா ஆகிய 4 பேரும்தான் அந்த போராளிகள்.
‘போராளி’ படத்துக்காக, கடந்த 2 வருடங்களாக நான் தலைமுடியை வளர்த்தேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட தலைமுடி வளர்த்தேன். இப்போது நீங்கள் பார்ப்பது வேறு. படத்தில் இந்த ஜடா முடியுடன் எனக்கு இன்னொரு தோற்றமும் இருக்கிறது.
இவ்வாறு சசிகுமார் பேசினார்.

Categories: