கொழும்பு, செப்.6: இலங்கையில் தமிழர்களை மீள் குடியமர்த்துவது மற்றும் புனர்வாழ்வுப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், அவற்றை துரிதப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என தமிழக் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியதாவது: தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணி மிகவும் மந்தகதியில் நடைபெற்றுவருகிறது. எனவே இந்தியா மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
இடம்பெயர்ந்தோருக்காக 50 ஆயிரம் வீடுகள் திட்டத்தை இந்தியா வழங்கிய போதும் பெரும்பாலானோர் இன்னும் வீடில்லாமல் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இது வரை 1000 வீடுகள் மாத்திரமே இந்தியாவின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும். இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது 1500 இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்துக் கோயில்கள் மீண்டும் புதுபிக்கப்படுவதை சிங்கள ராணுவம் தடுத்து வருகிறது. எனவே இந்தக்கோயில்களை புனரமைத்து தர இந்தியா உதவ வேண்டும்.
இவ்வாறு சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Categories:
உலகம்