Tuesday, 4 October 2011

கணவரின் நண்பரை மணக்க துடிக்கும் பெண் போலீஸ்


சென்னை, செப். 7: கணவரின் நண்பரை எப்படியாவது மணந்தே தீருவேன் என்று சென்னையை சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டு அடம்பிடித்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் கமிஷனரிடம் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா (35). இவரது கணவர் விஜயசந்திரன் (40). இந்நிலையில், சுரேகா சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில் “எனது கணவர் விஜயசந்திரனை தாம்பரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தலைமை பெண் காவலர் ஒருவர் மணந்தே தீருவேன் என்று அடம்பிடிக்கிறார். இதனால், எனக்கு பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தலைமை காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: விஜயசந்திரனும், தாம்பரம் போலீஸ் ஸடேஷனில் பணிபுரியும் பெண் ஏட்டுவின் கணவரும், கால்டாக்சி டிரைவருமான  தியாகராஜனும் நெருங்கிய நண்பர்கள். தியாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தியாகராஜனுக்கும், பெண் ஏட்டுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.
கணவனை திருத்த அவரது நண்பர் விஜயசந்திரனை பெண் ஏட்டு அணுகி உள்ளார். விஜயசந்திரனும்,  உதவி செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தியாகராஜனின்  குடிப்பழக்கத்தை நிறுத்தினார்.  இதற்கிடையில், பெண் ஏட்டுக்கு விஜயசந்திரன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை மணந்து கொள்ள நினைத்தார். பல முறை இதுகுறித்து விஜயசந்திரனிடம் பேசியுள்ளார்.
இந்த தகவல் சுரேகாவுக்கு தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். பெண் ஏட்டை சந்தித்து சண்டை போட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர் ‘விஜயசந்திரனை பலாத்கார வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன்’ என்று சுரேகாவை மிரட்டி உள்ளார். இதனால், பயந்து போன சுரேகா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.