டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்கு உரியவரை போன்று வரையப்பட்ட இரு படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸுடன் வந்த நபரை நேரில் பார்த்ததாக கூறிய இருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து இந்தப் படங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த இரு நபர்களுக்கும் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் டெல்லி காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மகேந்தர் என்பவர் குண்டுவெடிப்புக் குற்வாளி குறித்த தகவலை டெல்லி போலீஸாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெள்ளை நிற சட்டை அணிந்த ஒருவர் சூட்கேஸ் ஒன்றுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தைப் பார்த்தேன். அதன் பின்னர் சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று அவர் கூறியுள்ளார். இவர் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்திரு்நதார்.
மகேந்தர் மேலும் கூறுகையில், நீதிமன்றத்தினுள் செல்வதற்கு அனுமதிச்சீட்டு வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். நான் விசாரணை ஒன்றுக்காக உயர்நீதிமன்றத்துக்கு முதன்முறையாக வந்ததால் எனக்கு அந்த நடைமுறை எதுவும் தெரியாது.
என்னுடைய நண்பர் ஒருவருடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது வெள்ளைநிற சட்டை அணிந்திருந்த ஒருவர் சூட்கேஸுடன் வந்ததைப் பார்த்தேன். அடுத்த சில நிமிடங்களில் குண்டுவெடித்தது. பின்னர் நான் எதையும் பார்க்க முடியவில்லை.
குண்டுவெடிப்பு நடந்தவுடன் வெளியே செல்ல உதவுமாறு போலீஸ்காரர் ஒருவரை கேட்டுக்கொண்டேன். அவரும் உடனடியாக உதவி செய்தார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மக்களுக்கு உதவி செய்தனர் என்றார் அவர்.
Categories:
உலகம்