Monday, 26 December 2011

இளையராஜா வீடு முன்பு ஆர்ப்பாட்டம்

கேரளத்தைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

கேரளத்தவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்பு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டிசம்பர் 28ம் தேதி மலபார் கோல்ட் நிறுவன இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். மலபார் கோல்ட் நிறுவனம் கேரளாவைச் சேர்ந்ததாகும். இதனால் இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.கவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்களில் சிலர் வீட்டுக்குள் சென்று இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.