Thursday 8 December 2011

சிறுமிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

புதுடெல்லி : பெற்றோர் தங்களுக்கு ஏற்பாடு செய்த குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்து நிறுத்திய மேற்கு வங்காள சிறுமிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டி, பரிசு வழங்கினார். மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணம் அதிகளவில் நடக்கிறது. இதுபோல் பெற்றோர் தங்களுக்கு செய்த திருமண ஏற்பாட்டை சங்கீதா பவுரி, பினா கலிந்தி, முக்தி மஜ்ஹி ஆகிய சிறுமிகள் கடுமையாக எதிர்த்து நிறுத்தினர். இவர்கள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 

பள்ளியில் படிக்கின்றனர். இவர்களின் தைரியத்தை பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 3 பேரையும் ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று அழைத்து பாராட்டி, தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, ‘குழந்தை திருமணத்தை இந்த 3 சிறுமிகளும் எதிர்த்ததை கண்டு மகிழ்கிறேன். இவர்கள் மற்ற சிறுமிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள்’’ என்றார். சங்கீதா அளித்த பேட்டியில், ‘‘திருமண ஏற்பாட்டை ஏற்க முடியாது என்று  எவ்வித பயமும் இல்லாமல்  எதிர்த்தேன். ஆனால், ஜனாதிபதியுடன் சந்திப்பு என்றதும் பயந்து நடுங்கி விட்டேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.